ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிய மொய் விருந்து


ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிய மொய் விருந்து
x

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் வழக்கம் போல ஆடி மாதம் நடக்கும் மொய் விருந்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கியது.

புதுக்கோட்டை

மொய் விருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதியான கீரமங்கலம், கொத்தமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு, அனவயல், புள்ளாண்விடுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காதணி, திருமண விழாக்கள் மட்டுமின்றி மொய் விருந்துகள் தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் தனித்தனியாக நடந்த மொய் விருந்துகள் பிறகு 10 முதல் 30 பேர் வரை இணைந்து ஒரே பத்திரிகை அச்சடித்து ஒரே விழாவாக நடத்தி மொய் வசூல் செய்து வருகின்றனர். இதனால் பலர் வருமானம் ஈட்டினார்கள். பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

நிறுத்தப்பட்ட மொய் விருந்துகள்

கீரமங்கலம் பகுதியில் ஆடி மாதத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, ஆவணம், திருச்சிற்றம்பலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வேம்பங்குடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் ஆவணி மாதத்திலும் மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின் தாக்கம் மற்றும் 2021-ம் ஆண்டு வரை கொரோனா தொற்று வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் எங்கும் மொய் விருந்துகள் நடத்தப்படவில்லை. இதனால் மொய் விருந்தை நம்பி வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் பல குடும்பங்கள் தவித்தனர்.

ஒரு மாதம் முன்பாக மொய் விருந்துகள்

கடந்த சில வருடங்களாக கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மொய் விருந்துகளை காலம் கடந்து தை மாதத்தில் நடத்தினர். ஆனாலும் எதிர்பார்த்த மொய் வசூல் ஆகவில்லை. அதனால் ஒரே மாதத்தில் ஒரே நேரத்தில் 500 பேருக்கும் மேல் மொய் விருந்துகள் நடத்தினால் வசூல் மேலும் குறையும் என்பதால் கீரமங்கலம் பகுதியில் இந்த மாதமே மொய் விருந்துகள் நடத்த பலர் ஆயத்தமாகி நேற்று முதல் மொய் விருந்து நடத்த தொடங்கி உள்ளனர். இதனால் எதிர்பார்க்கும் அளவு மொய் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கீரமங்கலம் பகுதியினர் கூறுகையில், கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் விவசாயம் குறைந்து கடந்த 2 வருடங்களாக மொய் வசூல் குறைந்திருந்தது. அதேபோல கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக விவசாயிகளுக்கு முற்றிலும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து மொய் வசூல் குறைவாக உள்ளது என்றனர்.


Next Story