களை கட்டத்தொடங்கிய மொய் விருந்து விழா


களை கட்டத்தொடங்கிய மொய் விருந்து விழா
x

களை கட்டத்தொடங்கிய மொய் விருந்து விழா

தஞ்சாவூர்

பேராவூரணியில் மொய் விருந்து விழா களை கட்டத்தொடங்கியது.

மொய் விருந்து விழா

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு, கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பணத்தேவை இருக்கும் சமயத்தில் அந்த பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம். இந்த விழா ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். மொய்விருந்து விழா என அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொடுப்பார்கள். மொய் விருந்திற்கு வரும் அனைவருக்கும் கிடா வெட்டி கறி குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பார்கள்.

வாழ்வாதாரம்

சாப்பிட்ட பிறகு விருந்தினர்கள் தங்களால் முடிந்த பணத்தை முறையாக தங்கள் பெயரில் மொய் விருந்து நடத்துவோரின் மொய் நோட்டில் எழுதி செல்வார்கள். பேராவூரணியில் மொய் விருந்து விழா நடத்துவதற்காகவே 20-க்கும் மேற்பட்ட மொய் விருந்து விழா அரங்கங்கள் உள்ளன. மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வர். பணத்தேவைக்காக வங்கியிலோ, தனிப்பட்ட நபர்களிடமோ, வட்டிக்கு கடனாக பணம் வாங்காமல் இருக்கவும், கஷ்டத்தில் இருக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவுதற்கும் தொடங்கப்பட்டது தான் மொய் விருந்து விழா.

களை கட்ட தொடங்கியது

ஒரு நபர் மொய் பிடித்தால் அடுத்த 5ஆண்டுகளுக்குப்பிறகு தான் பிடிக்க வேண்டும். மொய் செலுத்தியவர் மொய் விருந்து விழா நடத்தும்போது, மொய் வாங்கியவர்கள் எழுதிய பணத்தை விட கூடுதலாக சேர்த்து திரும்ப மொய் எழுதும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் மொய் விருந்து விழாக்கள் பேராவூரணியில் களை கட்ட தொடங்கி உள்ளது. இதனால் பேராவூரணி கடைவீதியில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story