கோவில் பிரசாதங்கள் பக்தர்கள் வீடு தேடி வரும் திட்டம் -அமைச்சர் தொடங்கி வைத்தார்
கோவில் பிரசாதங்கள் பக்தர்களின் வீடு தேடி வரும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் தகவல்கள், சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது.
48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது.
செயலியின் பயன்கள் என்ன?
இந்த 2 திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்தறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'திருக்கோவில்' செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.
மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. படிப்படியாக மற்ற கோவில்களின் விவரங்களும் இணைக்கப்படும்.
உலகம் முழுவதும்...
பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு சென்றடைகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை செயல்படுத்தி இருக்கின்றோம்.
இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக, 3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருச்செந்தூர் உள்பட அனைத்து கோவில்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்கின்ற முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் எங்களது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். கோர்ட்டுக்கு செல்வதாக அந்த கோவிலின் வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் அங்கு நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லலாம் என்று காத்திருக்கிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் அங்கு என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ அவைகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இயக்குநர் (தலைமையிடம்) ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.