கவுன்சிலர்கள் பேசி கொண்டிருந்த போதே கூட்டத்தை முடித்த மேயர்
மாநகராட்சி கடைகள் மறுஏலம் விடப்படுவது ஏன்? என்று கவுன்சிலர்கள் பேசி கொண்டிருந்தபோது கூட்டத்தை மேயர் முடித்ததுடன், ஒலிபெருக்கியும் நிறுத்தப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி அவசர கூட்டம்
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அவசர கூட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், திருவையாறு வணிக வளாகம் ஆகியவற்றில் அதிக வாடகை காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளுக்கு கடந்த மாதம் 21-ந் தேதி நடைபெற்ற ஏலம் குறித்து முடிவு செய்வது தொடர்பான பொருள் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இது குறித்து கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
மறுஏலம் ஏன்?
கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க):- இந்த கடைகள் ஏற்கனவே மே 12-ந் தேதி, ஜூன் 16-ந் தேதி, ஜூலை 20-ந் தேதி, ஆகஸ்டு 24-ந் தேதியில் ஏலம் விடப்பட்டபோது, அது தொடர்பான பொருள் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை தெரிவிக்க வேண்டும். பெரியகோவில் முன்பு வாகன நிறுத்துமிடத்தில் தளம் அமைத்து தர வேண்டும்.
நீலகண்டன் (தி.மு.க):- ஏலம் குறித்து முடிவு செய்ய அவசரக் கூட்டம் நடத்துவது தேவையில்லாதது. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளில் ஏற்கனவே ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதே கடைக்கு இப்போது ரூ.8 ஆயிரத்து 100 என வாடகை நிர்ணயம் செய்திருப்பது ஏன்? அதேபோல் ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்திற்கு ஏலம் போன கடையை தற்போது ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மறு ஏலம் விடப்பட்டுள்ளது ஏன்? இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
ஆனந்த் (தி.மு.க):- ஏற்கனவே ஏலம் விடப்பட்ட கடைகளை இப்போது மீண்டும் ஏலம் விடுவதற்கான காரணத்தை கேட்கிறோம்.
நிறுத்தி வைக்க தயார்
மேயர்:- ஏற்கனவே, நடைபெற்ற ஏலத்தில் 10 ஆயிரத்து 500-க்கு எடுக்கப்பட்ட கடையும் திரும்ப ஒப்படைக்கப்பட்டதால், அதை மறு ஏலத்தில் அதிகபட்ச ஏல தொகையாக ரூ.8 ஆயிரத்து 100-க்கு கேட்கப்பட்டுள்ளது. எந்த கடை வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தால், அதை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு கேட்கின்றனரோ? அவர்களுக்கு வழங்கப்படும். அதிகதொகை கேட்க யாராவது இருந்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும்.
ஆணையர்:- மே 12-ந் தேதி, ஜூன் 16-ந் தேதி, ஜூலை 20-ந் தேதி, ஆகஸ்டு 24-ந் தேதியில் நடைபெற்ற ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்ச தொகை கேட்டவர்களுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகண்டன்:- எல்லா கடைகளுக்கும் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி
இதைத்தொடர்ந்து, மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது. எனவே, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்துவிட்டதாகவும் கூறி மேயர் எழுந்து சென்றார். மேலும், ஒலிபெருக்கிகளும் நிறத்தப்பட்டன.. கூட்டத்தை பாதியில் முடித்ததற்கும், ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டதற்கும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிபெருக்கியை நிறுத்தி பணியாளரிடம் எதற்காக நிறுத்தினீர்கள் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.