விவசாயியை தாக்கியவர் பிடிபட்டார்
மானூர் அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மானூர்:
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). விவசாயி. இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் உள்ளது. அதன் அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபாலகண்ணனின் நிலமும் உள்ளது. இந்த நிலையில் மாரியப்பன் தனது வயலில் நெல் அறுவடை செய்ய அறுவடை எந்திரம் கொண்டு வந்தார். அப்போது கோபாலகண்ணன் தனது வயலில் தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போட்டார்.
அப்போது மாரியப்பன், அறுவடை எந்திரம் போக வேண்டும், எனவே இப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டாம் என்று கூறி மோட்டாரை அணைத்து உள்ளனர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாரியப்பனை கோபாலகண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாரியப்பன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கோபாலகண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.