தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம்


தினத்தந்தி 10 Oct 2023 2:45 AM IST (Updated: 10 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

சக்தி தலநார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் கொய்யா மரங்கள் சேதம் அடைந்தது.

கோயம்புத்தூர்

சக்தி தலநார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் கொய்யா மரங்கள் சேதம் அடைந்தது.

மக்னா யானை

தர்மபுரியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து, ஆனைமலை அருகே மந்திரிமட்டம் வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை, பொள்ளாச்சி அருகே சரளபதிக்குள் புகுந்தது. இதனால் மீண்டும் பிடித்து, வால்பாறை அருகே சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விட்டனர்.

ஆனாலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊசிமலை டாப், அக்காமலை புல்ேமடு, சிங்கோனா, காஞ்சலை, நடுமலை, பச்சைமலை, சிறுகுன்றா, கூழாங்கல் ஆறு என ஒவ்வொரு பகுதியாக இடம்பெயர்ந்து வந்தது. குறிப்பாக கடந்த மாதம் 20-ந் தேதி முதல் மானாம்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த அந்த யானை, கடந்த 5 நாட்களாக தலநார் எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு வந்தது.

கொய்யா மரங்கள்

இந்த நிலையில் நேற்று சக்தி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் மக்னா யானை நுழைந்தது. தொடர்ந்து அங்குள்ள கொய்யா மரங்களை சேதப்படுத்தி பழங்களை பறித்து தின்று அட்டகாசம் செய்தது.

பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டு உள்ளது.

இந்த இடத்தில் இருந்து ஆழியாறு வனப்பகுதி அருகில் உள்ளதால் சமவெளி பகுதியை நோக்கி அந்த யானை இடம்பெயர வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க வால்பாறை வனத்துறையினர், மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story