மதுரை மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்


மதுரை மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்
x
தினத்தந்தி 20 Aug 2023 7:30 PM GMT (Updated: 20 Aug 2023 7:30 PM GMT)

மதுரை மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

மதுரை

மதுரை

மதுரை மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

தொண்டர்கள் நம்பிக்கை

மதுரையில் நேற்று நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வி.என்.ராஜலட்சுமி வரவேற்புரை அளித்து பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க.வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியும் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவர்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இனி இங்கு ஒரே கட்சி. ஒரே கொடி. அது அ.தி.மு.க.தான் என்பதை இந்த மாநாடு சொல்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமியின் உழைப்பும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் காரணம். குறிப்பாக அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு காரணம். தற்போதைய தி.மு.க. அரசு, மக்கள் வயிற்றில் அடிக்கும் அரசாக உள்ளது. சாதி, சமய சண்டை, ஊழல், கொள்ளை என தற்போதைய ஆட்சி நடக்கிறது. 2026-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆண்டாக மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் சபாநாயகர் தனபால் பேசியதாவது:-

இந்த மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் நானும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவுக்காக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஆதரவு அளித்தோம். தி.மு.க.வுக்கு எந்த ஒரு செயலையும் நேர்மையாக செய்யத்தெரியாது. குறுக்கு வழியில்தான் செய்வார்கள். 2017-ம் ஆண்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது தி.மு.க.வினர் என்னுடைய சட்டையை கிழித்து அராஜகம் செய்தனர். அதன்பின் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுக்கும் மேலாக நல்லாட்சியை நடத்தினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. ஆட்சி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தொண்டர்களுக்காகவே வாழ்ந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. அடுத்துவருவது எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான். அது தான் புரட்சி. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடு இது. ஜெயலலிதாவை போலவே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவர்தான் அடுத்த முதல்-அமைச்சர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-

மதுரை நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. அந்த வகையில் இந்த மாநாடும் மதுரை வரலாற்றில் இடம் பெற்று உள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய வகையில் இந்த மாநாடு நடந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆகஸ்டு மாதத்தில்தான் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் தீவிரமடைந்தது. அதுபோல தற்போது கோபாலபுரத்து கொள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை இந்த மாநாட்டில் தொடங்கியுள்ளோம். நிச்சயம் இந்த போராட்டம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புரட்சி தமிழர்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என ஆரூடம் சொன்னார்கள். ஆனால் தென்மாவட்டங்களில் இருந்துதான் இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்று, அவருக்கு ஆதரவை தெரிவித்து உள்ளார்கள். எங்களைப்போல நீங்களும் இதுபோல ஒரு மாநாட்டினை நடத்திக்காட்டுங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசும்போது, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து இந்த மாநாட்டின் வெற்றியின் மூலமாக எடப்பாடி பழனிசாமி தேசிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டத்தை சர்வ சமயத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.


Next Story