விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x

செஞ்சி அருகே பேனர் கிழிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

செஞ்சி

பேனர் கிழிப்பு

விழுப்புரம் மாவட்டம் மற்றும் வல்லம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் இருந்து வல்லம் வரை ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கே திரண்டனர்.

சாலைமறியல்

பின்னர் பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் தலைமையில் வல்லம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாநில செயலாளர் துரைவளவன், மாவட்ட அமைப்பாளர் அரசெழிலன், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் கோவிந்தன், வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் நாட்டார்மங்கலம் கூட்டு ரோடில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேனர்களை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் நாட்டார் மங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story