26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் உண்ணாவிரத போராட்டம்
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நில அளவை களப்பணியாளர்கள் மாநில பொருளாளர் ஸ்டேன்லி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்து முனியாண்டி, ராஜேந்திரன், மாரிமுத்து, முருகன், பச்சையாண்டி, ரகுபதி முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையா, மாநில துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.