நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தென்காசி

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

108 ஆம்புலன்சில் குறைபாடு

ஆழ்வார்குறிச்சி ஆவுடையப்பனார் தெருவை சேர்ந்த வெள்ளையன், கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனது மகன் முத்து வெங்கடேஷ் (வயது 6) கடந்த 20-ந் தேதி அன்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது காய்ச்சல் பாதிப்பு குறித்து கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்பை அரசு ஆஸ்பத்திரியில் எனது மகனை சேர்த்தேன். அங்கு அவனுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை. பின்னர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்து வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டான் என்று கூறினார்கள். அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை குறைபாடுகள் உள்ளன. மேலும் ஆம்புலன்சில் ஆக்சிஜன் போதுமான அளவில் இல்லை. எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் 108 ஆம்புலன்சில் நடக்க கூடாது. மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ்

தென்காசி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் அய்யாதுரை, மாநிலச் செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ் மற்றும் கட்சியினர் கொடுத்துள்ள மனுவில்,

தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயம், கஞ்சா, விஷச்சராயம், மெத்தனால், போதை ஊசி, போதை மருந்து என பல்வேறு உருவங்களில் தமிழக மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு தினம் தோறும் சாவு எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகளை வீதி தோறும் திறந்து வைத்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தின் மூலம் அனைத்து வகையான போதை பொருள் வியாபாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்து முன்னணி

இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் அச்சன்புதூரை சேர்ந்த சிங்கப்பூர் தங்கம் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் ஆணையாளர் பக்தர்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், பால்குடம் எடுப்பதற்கு கட்டணம் விதிக்கிறார் என்றும் பாரம்பரியமாக நடக்கும் வைகாசி விசாகத் திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நில ஒருங்கிணைப்பு சட்டம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை கொடுத்துள்ள மனுவில், விவசாயிகள் நலனுக்கு எதிராக உள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023-ஐ திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story