பேரையூர் சிவன் கோவில் பூஜைக்காக நிலத்தை தானம் வழங்கிய மன்னர்
பேரையூர் சிவன் கோவில் பூஜைக்காக நிலத்தை மன்னர் தானமாக வழங்கியது 800 ஆண்டுகள் பழமையான பாறை கல்வெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேரையூர்,
பேரையூர் சிவன் கோவில் பூஜைக்காக நிலத்தை மன்னர் தானமாக வழங்கியது 800 ஆண்டுகள் பழமையான பாறை கல்வெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
பேரையூர் மொட்டைமலை பகுதியில் ஆதிகால மனிதன் வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றாக இயற்கையான குகை, வாழ்விடம் எச்சங்கள் மற்றும் முதுமக்கள் தாழி, பாறை ஓவியம், பாறை கல்வெட்டு ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது குறித்து கள ஆய்வை மேற்கொண்ட பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-
பேரையூரில் மேலப்பரங்கிரி என்று அழைக்கக்கூடிய மொட்டை மலை உள்ளது. மேலப்பரங்கிரி மலையின் பின்புறம் புடவு பகுதியில் ஆதி கால மனிதன் உருவம் வெள்ளை நிற பாறை ஓவியம் அழகாக தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை நிற பாறை ஓவியம் மனித இனக்குழு இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்துள்ளது. பாறை ஓவியங்களில் மனிதன் நடனமாடும் காட்சி, மிருகங்கள், இனக்குழு, போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பேரையூர் 800 ஆண்டுகளுக்கு முன்பு கடுங்கோன் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் கடுங்கோ மங்கலம் பேரையூர் என்று மருவியது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் செங்குடி நாட்டு பிரிவின் உட்பகுதியாக காணப்பட்டது.
சிவன் கோவிலுக்கு நில தானம்
மலையின் உச்சியில் கோவிலின் பின்புறம் 1280, 27-ம் ஆட்சியாண்டு முதலாம் சடைவர்மன் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் வெட்டவெளி பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கிட்டத்தட்ட 51 வரி கொண்ட தமிழ் எழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பேரையூரின் பழைய பெயர் கடுங்கோன்மங்கலம் என்றும், இவ்வூர் செங்குடி நாட்டு எல்லைக்குட்பட்டவை என்றும், இவ்வூரின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து நிலங்களையும், விளையும் விளைச்சல் மற்றும் மலையடிவாரத்தில் இருக்கும் குளத்தையும், முத்து உடையார் விக்கிரமசிங்கதேவன் என்ற சிற்றரசன் பேரையூரில் வீற்றிருக்கும் மேலப்பரங்கிரி மல்லிகார்ஜுனர் என்று அழைக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு கால பூஜை மற்றும் திருவிழாக்கள் கோவில் பராமரிப்பு போன்ற பணிக்காக நில தானங்கள் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகின்றது. குறிப்பாக கல்வெட்டில் நிலதானம் வழங்கியவரின் பெயர், அவர்களின் வம்சம் மற்றும் கல்வெட்டு பொறித்தவரின் பெயர் வெட்டப்பட்டுள்ளது.
முதுமக்கள் தாழி
கல்வெட்டின் கிழக்கு திசையில் ஆறு வரி கொண்ட பாடல்கள் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சிவனைப் போற்றியும், தீராத நோய் இப்பாடலை பாடினால் தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 2 கல்வெட்டும் கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய காலத்து கல்வெட்டாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது இப்பாறை கல்வெட்டு மழை மற்றும் வெயிலால் பாறை சிதைந்து பல எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்படுகின்றது. மேலும் இந்த மொட்டை மலை அடிவாரத்தில் பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழி ஏராளமாக உள்ளன.
பல்வேறு வரலாற்று சான்றுகளை உள்ளடக்கிய பேரையூர் மொட்டைமலை பகுதி, அதில் உள்ள பாறை கல்வெட்டு, பாறை சிற்பம், ஆகியவற்றை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.