சித்த மருத்துவ பெண் டாக்டர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கைது


சித்த மருத்துவ பெண் டாக்டர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கைது
x
தினத்தந்தி 14 Jun 2022 3:49 AM IST (Updated: 14 Jun 2022 6:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்த மருத்துவ பெண் டாக்டர் கொலை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை


சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்த மருத்துவ பெண் டாக்டர் கொலை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை உலுக்கிய சம்பவம்

சென்னை தியாகராயநகர் ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் மலர்க்கொடி. சித்த மருத்துவ டாக்டர். இவர் வீட்டில் தனியாக இருந்த போது, கடந்த 21-5-2002 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த படுகொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சென்னையை உலுக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.

இந்த வழக்கை பாண்டிபஜார் போலீசார் விசாரித்தனர். மலர்க்கொடி வீட்டில் வேலை செய்த அழகர்சாமி அவரது சகோதரர் ராமகிருஷ்ணன், நண்பர் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் அழகர்சாமி, அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் அப்போதே கைது செய்யப்பட்டுவிட்டனர். இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. கைதான அழகர்சாமியும், சக்திவேலும் வழக்கில் இருந்து கோர்ட்டு மூலம் விடுதலை ஆகிவிட்டனர்.

தலைமறைவு குற்றவாளி

ஆனால் ராமகிருஷ்ணன் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். கோர்ட்டில் அவர் மீதான வழக்கு நிலுவையில் இருந்தது. ராமகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து, குழந்தைகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். போலீசாரும் அவரை தேடுவதை விட்டுவிட்டனர்.

இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் பகுதிக்கு வந்து சமீபத்தில் குடியேறினார். தன்மீதான வழக்கு கோர்ட்டில் முடிந்து விட்டதாக நினைத்து தைரியமாக வாழ ஆரம்பித்தார். இந்த விஷயம் பாண்டிபஜார் போலீசுக்கு தெரியவந்தது. கோர்ட்டில் அனுமதி பெற்று, ராமகிருஷ்ணனை கைது செய்ய, உதவி கமிஷனர் பிரகாஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது-சிறை

தனிப்படை போலீசார் திண்டுக்கல் பகுதியில் வசித்து வந்த ராமகிருஷ்ணனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி உள்ளது.


Next Story