திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு


திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு
x

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.

சென்னை

2021-2022-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், 'கடந்த பத்து ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படுபவை போக, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்', என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக சென்னை, மதுரை, திருச்சியில் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமி ராஜு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகளை கடந்த 2021-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைகள் வைப்பு திட்டத்தின்கீழ் நிரந்தர முதலீடு செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 39 கிலோ 704 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் தங்க கட்டிகளாக மாற்றிடும் வகையில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவை உருக்கப்பட்டு சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு முறையே ரூ.17.39 கோடி மற்றும் ரூ.17.46 கோடி ஆகும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரங்களை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் என்.கே.மூர்த்தி, மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.சீனிவாசன் ஆகியோரிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தின் மூலம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.39.13 லட்சமும், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.39.92 லட்சமும் வட்டித் தொகையாக கிடைக்கபெற்று, அந்தந்த கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அக்கோவில்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story