பலா பழம் சீசன் தொடங்கியது
பர்கூர் மலைப்பகுதியில் பலா பழம் சீசன் தொடங்கியது.
அந்தியூர்:
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இங்கு விளையும் பலா பழங்களுக்கு தனி மவுசு உண்டு. எந்தவித ரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் பலா பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். தற்போது தாமரைக்கரை, பர்கூர், தேவர்மலை உள்பட பல்வேறு பகுதிகளில் பலா மரங்கள் நன்கு வளர்ந்து பழங்கள் காய்த்து தொங்குகின்றன.
இதனால் இந்த பகுதியில் இருந்து பலா பழங்களை வியாபாரிகள் பறித்து வந்து தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம், துருசனாம்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். ஈரோட்டில் இருந்து பர்கூர் வழியாக மைசூர் செல்லும் பஸ் பயணிகள் மற்றும் மைசூரில் இருந்து ஈரோடு செல்லக்கூடிய பயணிகள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பலா பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து பலா பழம் விற்பனையாளர்கள் கூறுகையில், 'இந்த ஆண்டு பலா பழம் சீசன் தொடங்கி உள்ளது. மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருவதால் காய்கள் அந்த அளவுக்கு சரியாக காய்க்கவில்லை. சிறிய பலா பழம் ஒன்று ரூ.150-க்கும், பெரிய பலா பழம் ஒன்று ரூ.400-க்கும் விற்பனை ஆகிறது,' என்றனர்.