ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: அரசு ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி


ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்:  அரசு ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்:  முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி
x

ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் தெரிவித்தார்.

தேனி

சிறுமி உயிரிழப்பு

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில், மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்களுடன், ஓடைப்பட்டியில் பூங்காவுக்கு தோண்டிய குழியில் கடந்த 6-ந்தேதி தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி ராணியின் பெற்றோரும் வந்தனர்.

சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி, பூங்கா அமைக்கும் பணியில் அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோரிக்கை மனுவை கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் கொடுத்தனர்.

ரூ.25 லட்சம் இழப்பீடு

பின்னர், மாநில பொதுச்செயலாளர் ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பூங்காவுக்கு குழி தோண்டப்பட்ட நிலையில் பணிகள் மேற்கொண்டு நடக்காமல் கிடப்பில் கிடந்தது. அதில் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு ஒப்பந்ததாரர் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் பெற்றோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறுமியின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

போராட்டம்

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 19-ந்தேதி தேனி மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகள் அனைத்தையும் முழுமையாக அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதோடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story