கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் திடீர் போராட்டம்
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் திடீரென போராட்டம் நடத்தினார்கள்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக ஆண்கள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், நேற்று காலையில் உள்நோயாளிகள் 15-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்கக் கோரி, நகரசபை கவுன்சிலர் செண்பகமூர்த்தி, அப்துல் கலாம் ரத்ததான கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் திடீரென போராட்டம் நடத்தினார்கள்.
இவர்களிடம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் அகஸ்தியன், டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பழைய பெண்கள் பிரசவ வார்டில் சுகாதார வசதிகள் செய்து, ஓரிரு நாட்களில் படுக்கை வசதிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று டாக்டர்கள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை உள்நோயாளிகள் கைவிட்டு சென்றனர்.