தொழில் நகரமான கோவையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர் - வானதி சீனிவாசன்


தொழில் நகரமான கோவையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர் -  வானதி சீனிவாசன்
x

தொழில் நகரமான கோவையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை,

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.அரங்கத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

மேலும், கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் தூர்தர்ஷன் அலுவலகத்தின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் ஆர்.முரளி, கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, கோயம்புத்தூர், தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் மாவட்ட கல்வி அலுவலர் கிரிஜா சிவகாமி, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான பிரகாஷ் மற்றும் பலர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பாக அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் வரவேற்புரை வழங்க, மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இயக்குனர் ஜெ.காமராஜ் தலைமை உரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிரை ஈர்த்த வீரர்களை கொண்டாடும் வகையில் பாரத பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இக்கண்காட்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிய பல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கனரா வங்கியின் சார்பில் ரூ. 1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டிலான கடன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும், இக்கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், ஊட்டச்சத்து குழந்தைகள் வளர்ப்பு பிரிவில் சிறப்பாக கலந்து கொண்ட தாய்மார்களுக்கும் வானதி சீனிவாசன் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய வானதி சீனிவாசன் பேசுகையில்,

தொழில் நகரமாக திகழும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பல தியாகிகள் இருந்துள்ளனர். மேலும், மக்கள் நலன் சார்ந்து மத்திய அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் இதுபோன்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முக்கிய பங்காற்றுவதாகவும், இந்நிகழ்வுகளை தொடர்ந்து மத்திய மக்கள் தொடர்பாக அலுவலகம் பல்வேறு பகுதிகளிலும் நடத்த வேண்டும்.

இந்நிகழ்வினை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வர போக்குவரத்து வசதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அறியப்படாத வீரர்கள் குறித்த தகவல்களும், மத்திய அரசு அமல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விளக்க பதாகைகளும், மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பல்வேறு அலுவலகங்களின் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன



Next Story