சொர்ணகடேசுவரர் கோவிலில் மன்னா் சிலைகள் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே சொர்ணகடேசுவரர் கோவிலில் மன்னா் சிலைகள் மாயம் போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமைவாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழ சேதிராயர் மற்றும் விக்கிரம சோழச சேதிராயர். இவர்கள் கி.பி. 12-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சிசெய்த குறுநில மன்னர்களாவர். இவா்களின் உருவ சிலைகள், நெய்வனை கோவிலுக்கு எதிரே இருப்பதாக வரலாற்று நூல்களில் படித்திருக்கிறேன்.
இந்த நிலையில் ஆய்வுக்காக கடந்த 30-ந் தேதி சொர்ணகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது அங்கே இருந்த 2 மன்னர்கள் சிலைகளையும் மாணவில்லை. பின்னர் அதுபற்றி விசாரித்தபோது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் அந்த சிலைகளை எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனா். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மாயமான 2 மன்னர்கள் சிலைகளையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.