வீடு இடிந்து விழுந்தது; 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


வீடு இடிந்து விழுந்தது; 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x

நாகூரில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வீடு இடிந்து விழுந்தது

நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்க பொண்ணு (வயது50). நாகை நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சுனாமி மறுவாழ்வு திட்டத்தில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட கான்கிரீட் வீட்டில் வசித்து வந்தார்.

சேதம் அடைந்த நிலையில் அந்த வீடு இருந்தது. இங்கு தங்கபொண்ணு உடன் அவருடைய மகள் கோமதி, மருமகன் குமார் மற்றும் பேரக்குழந்தைகள் என 6 பேர் வசித்து வந்தனர். நாகூர் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் முதல் கனமழை பெய்தது.

இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கபொண்ணுவின் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.

கண்ணீர் மல்க கோரிக்கை

அப்போது தங்கப்பொண்ணு மற்றும் குடும்பத்தினர் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்கு வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தனர். இதனால் 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாகை தாசில்தார் ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை அங்கு சென்று இடிந்து விழுந்த வீட்டை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மாற்று வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபொண்ணு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.


Next Story