சவாலில் வென்ற 12-ம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த தலைமை ஆசிரியர்


சவாலில் வென்ற 12-ம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த தலைமை ஆசிரியர்
x

சவாலில் வென்ற 12-ம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் நற்செயல் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார்.

காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்க கூட்டத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று காத்திருக்கிறது, எனவே மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

மாணவிக்கு தலைமை ஆசிரியர் பதவி

இந்த சூழலில் காலாண்டு தேர்வில் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவி எஸ்.லோகிதாவை நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி அழகுபார்த்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாணவி லோகிதா ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்.

கலந்துரையாடல்

தொடர்ந்து மதிய உணவு இடைவேளை முடிந்து ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்று சரிபார்த்தார். அதோடு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை மிகவும் கச்சிதமாக செய்து முடித்த மாணவி லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

உந்துதலாக...

இதுகுறித்து மாணவி லோகிதா கூறும்போது, எனக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நான் நினைத்து பார்க்கவில்லை. தலைமை ஆசிரியரின் இந்த நற்செயல், என்னைப்போன்ற மற்ற மாணவிகளையும் அதிக மதிப்பெண்கள் பெற உந்துதலாக அமையும். சுமாராக படிப்பவர்கள்கூட இன்னும் கூடுதல் ஆர்வம் செலுத்தி படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார். இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா கூறுகையில், மாணவிகள் கல்வியுடன், தனித்திறன்களையும், தலைமைப்பண்பையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என்பதற்காகவே இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் தயக்கத்துடன் உள்ள பிற மாணவிகளும் தன்னம்பிக்கையுடன் வெளியே வருவார்கள்.. இதேபோன்று அடுத்த வாரத்தில், காலாண்டு தேர்வில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் காத்திருக்கிறது என்றார்.


Next Story