துப்பாக்கி தவறுதலாக வெடித்த குண்டு பாய்ந்து காவலாளி படுகாயம்


துப்பாக்கி தவறுதலாக வெடித்த குண்டு பாய்ந்து காவலாளி படுகாயம்
x

சென்னையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து, குண்டு பாய்ந்து காவலாளி பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

சென்னை

சென்னை,

சென்னையில் வங்கி ஏ.டி.எம்.களில் தனியார் நிறுவனம் ஒன்று பணம் செலுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் லட்சக்கணக்கான பணத்தை ஒரு வேனில் எடுத்துச்சென்று ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவார்கள்.

அவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும் வேன்களில் துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவர் உடன் செல்வார். அதுபோன்ற காவலாளிகள் இரட்டை குழல் துப்பாக்கியை கையில் வைத்திருப்பார்கள்.

நேற்று காலை சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் ராணா குமார் (வயது 30) துப்பாக்கியை தனது வலது பக்க இடுப்புக்கு நேராக வைத்து சுத்தம் செய்ததாக தெரிகிறது.

அப்போது துப்பாக்கி லாக் செய்யப்படாமல் இருந்துள்ளது. கை தவறுதலாக பட்டு துப்பாக்கி வெடித்து விட்டது. உடனே அதில் இருந்த குண்டு வெளியேறி, காவலாளி ராணா குமாரின் வலது பக்க இடுப்பில் துளைத்துக்கொண்டு வெளியேறி விட்டது. ராணா குமார் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. குண்டு துளைத்த வலி தாங்காமல் ராணா குமார் அலறி துடித்தார். அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

உடனடியாக அவரை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி, உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி வெடித்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குண்டு காயம் அடைந்த காவலாளி ராணா குமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.


Next Story