பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து கவர்னர் வாழ்த்து
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று அவர்களுக்கு வாழ்த்து கூறினார். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.
பின்னர் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நான் இங்கு வந்தது உங்களை புரிந்து கொள்ளவும், உங்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காகவும்தான், இருவருக்கும் வெகு விரைவில் ஜனாதிபதி பத்மஸ்ரீ விருதை வழங்க உள்ளார்.
பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர் பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களை பற்றி ஒருவரும் பேசுவதில்லை. இது வருந்தத்தக்க விஷயம்.
இந்தியாவில் பல இடங்களில் பாம்பு கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்களால்தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அது வருந்தத்தக்கது. இதனை ஒரு தொழிலாக பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும். இருளர்கள் பாம்பு பிடித்து மனித உயிர்களை காப்பாற்றுகின்றனர்.
நாம் இவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது. அவர்களுக்கான மரியாதையை பெற்று தர வேண்டும். இருளர்களுக்கு டாக்டர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். சில தொழில்நுட்பங்களை பாம்பு பிடி தொழிலில் கொண்டு வர வேண்டும். டாக்டர்கள் பல்வேறு அங்கீகாரத்துடன் வசதியாக வாழ்கின்றனர். ஆனால் இருளர் இன மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை இருளர் இன மக்களுக்காக செய்துள்ளன. அவர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வறுமையில் வாடுகின்றனர்.
ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும்.
இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசு பணியில் இல்லை என தெரிகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன். மாசி சடையன், வடிவேல் கோபால் அவர்களின் வீட்டுக்கு சென்றேன். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு, சென்னேரி அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் படித்து எதிர்காலத்தில் எந்த வேலைக்கு போக போகிறீர்கள் எனவும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.