மலைவாழ் மக்களை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கம் - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கம் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் மற்றும் சொரக்கொளத்தூர் பகுதியில் உள்ள வன விரிவாக்க நாற்றங்கால் மையங்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் விவசாயிகள் கருத்து கேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படவுள்ளது. பழங்குடியினர் மக்களுக்கு தேவையான சாலை வசதி, தண்ணீர் வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, மின் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வந்தவுடன் பசுமை தமிழ்நாடு என்ற தொலைநோக்கு பார்வையில் பசுமை இயக்கத்தை செயல்படுத்தில் வருகிறார். நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பாக இருந்தால் தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மலைபகுதிகளில் உள்ள அன்னிய தாவரங்களை அகற்றி கால்நடை தீவனப்பயிர்களை பயிர் செய்து மலைவாழ் மக்கள் பயன் பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி அவர்களை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கமாகும்.
மேலும் மலைப் பகுதியில் பாறைகள் கற்கள் கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.