மணல்குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
தென்பெண்ணையாற்றில் மணல்குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்
ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் முருகன், சகாபுதீன், தாண்டவராயன், அரசு, அரிகிருஷ்ணன், சிவராமன், பாலசுப்பிரமணியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக போராட்டக்குழுவில் மத்திய அரசு ஒப்புக்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி வருகிற 26-ந் தேதி நடைபெறும் பேரணியில் விழுப்புரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் 500 பேர் கலந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏனாதிமங்கலம் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு குடிநீர் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.