தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது:கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கனிமொழி எம்.பி கூறினார்.
செயற்கை கை, கால்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை உபகரணங்களை வழங்கி பேசினார்.
உறுதுணையாக..
அப்போது, தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் செய்கிறது. உங்களைப் போன்றவர்கள் இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும். நாங்கள் பக்கத்தில் உள்ளோம். எங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம்.
முத்தமிழறிஞர் கலைஞர், ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளி என்று அழைத்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை, நலிவடைந்தவர்களை அரவணைத்த கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை உருவாக்கி நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் எல்லோரை போன்று அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்று கருணாநிதி பாடுபட்டார். அதே வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன்
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி உள்ளார். ரூ.1500 பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி உள்ளார். நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்டு உள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் மாற்றுத்திறனாளி குடும்பத்தில் ஒருவர் பயன்பெறலாம். வருகிற 23-ந் தேதி கோவி்பட்டியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு உதவித் தொகை பெறாதவர்கள், உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்டவருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், அகில இந்திய மார்வாடி யுவா சங்க தலைவர் விஜய் சர்மா, செயலாளர் சரவண் ஜெயின், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் களம் நிகழ்ச்சி
கயத்தாறு பகுதியிலுள்ள ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, சவலாப்பேரி, சிவஞானபுரம், ஆசூர், காப்புலிங்கம்பட்டி ஆகிய ஊர்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமிபாண்டியன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. மக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து கோழி பண்ணை, தையல் கடை, ஜெராக்ஸ் கடை, மகளிர் குழுக்களுக்கு தலா 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை கடனுதவி, இலவச வீட்டு மனை பட்டாக்கள், விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, வேளாண்துறை மூலம் விதைகள் மற்றும் இடுபொருள் மானியம், மகளிர் சுய உதவி குழு கடனுதவி போன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ெதாடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுபம் ஞானதேவ் தாக்கரே, தாசில்தார் நாகராஜன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தாறு தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து காப்பலிங்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 22 லட்சத்து 65ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.