கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த 2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்


கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த 2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
x

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த 2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் கும்பல் வெட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை,

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22), டான்ஸ் மாஸ்டர். இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கஞ்சா, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் காந்திபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ் (24). இவர் மீது ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் ரஞ்சித்குமார் மீதான பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அதுபோன்று நித்தீஷ் மீதான வழக்கு கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

அரிவாள்களுடன் துரத்தினர்

இந்தநிலையில் நேற்று 2 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனால் கோர்ட்டில் ஆஜராக ரஞ்சித்குமார், நித்தீஷ் மற்றும் அவர்களின் நண்பரான ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக் (23) ஆகியோர் காலையில் கோவை கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் அவர்கள் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பினர். 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராம் நகரில் உள்ள ராமர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள்களுடன் வந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதனால் நிலைதடுமாறிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். மேலும் 3 பேரும் எழுந்து தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்திச்சென்றது. இதில் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். ஆனால் ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோரை சுற்றி வளைத்த அந்த கும்பல் அரிவாள்களால் வெட்டியது.

2 பேருக்கு அரிவாள் வெட்டு

இதில் 2 பேருக்கும் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் உயிருக்கு போராடினர். பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரை வெட்டியதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அங்கு ஏராளமானோர் கூடினார்கள்.

பொதுமக்களை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் காயம் அடைந்த ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதுடன், தப்பியோடிய கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story