பழ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை


பழ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
x

ுற்றாலம் அருகே பழ வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

குற்றாலம் அருகே பழ வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பழ வியாபாரி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி மகன் சுடலை (வயது 41). பழ வியாபாரியான இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இன்னும் சில நாட்களில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார்.

ஏலம் எடுத்ததில் பிரச்சினை

அப்போது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏலத்தில் கடுமையான போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுடலை, ரம்டான் பழத்தை ஏலத்தில் எடுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த காளிதாசுக்கும், சுடலைக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

சரமாரி வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள சுடலைமாடன் கோவில் அருகில் சுடலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாசும், அவரது நண்பரான வேறு ஒருவரும் சேர்ந்து அரிவாளால் சுடலையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுடலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சுடலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான காளிதாஸ் உள்ளிட்ட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

குற்றாலம் அருகே பழம் ஏலம் எடுத்ததில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story