வழிதவறி சாலையில் சுற்றித்திரிந்த குட்டியை தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் குட்டி யானை ஒன்று தனியாக சாலையில் சுற்றித்திரிந்தது.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் குட்டி யானை ஒன்று தனியாக சாலையில் சுற்றித்திரிந்தது. இதைப்பார்த்த எஸ்டேட் நிர்வாகத்தினர் மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வன ரோந்து பணியினர் மற்றும் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்று அந்த பகுதியில் நடமாடிய குட்டி யானையை மீட்டனர்.
பின்னர் வனத்துறையினர் எஸ்டேட் சுற்று வட்டார பகுதி முழுவதும் யானைக் கூட்டங்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை ரோந்து பணி மற்றும் டிரோன் மூலமாகவும் தேடியுள்ளனர். அப்போது பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் யானை கூட்டங்கள் முகாமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் எஸ்டேட் பகுதியில் இருந்து குட்டி யானையை லாரியில் ஏற்றி யானைக் கூட்டங்கள் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றனர். பின்னர் தாய் யானை இருந்த கூட்டத்துடன் குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக விட்டனர். அப்போது அந்த தாய் யானை, குட்டி யானையை சேர்த்துக்கொண்டது. இதனை நேரடியாகவும். டிரோன் மூலமாகவும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.