சத்துணவு கூட மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம்
நெல்லிக்குப்பம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூட மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் அடைந்தார்.
நெல்லிக்குப்பம்,
சிமெண்டு காரைகள் பெயர்ந்து...
நெல்லிக்குப்பத்தை அடுத்த பாலூர் சன்னியாசிபேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சாந்தி மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்தார். அப்போது சமையல் கூட கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து சாந்தியின் தலையில் விழுந்தது.
பரபரப்பு
இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த ஆசிரியர்கள் அவரை உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சாந்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் யாரும் சத்துணவு கூடத்திற்குள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். அரசு பள்ளியின் சத்துணவு கூட மேற்கூரை பெயர்ந்து ஊழியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்த சத்துணவு கூடம் பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டது.