சேலம் சுகவனேசுவரர் கோவிலில் முதல் கால யாக பூஜை தொடங்கியது


சேலம் சுகவனேசுவரர் கோவிலில் முதல் கால யாக பூஜை தொடங்கியது
x

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று இரவு முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று இரவு முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முதல் கால யாகபூஜை

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா பூஜை தொடங்கியது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பஞசகவ்யம், கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம், பஞ்சமூர்த்திகள் மற்றும் யாகசாலைக்கு கலசங்கள் புறப்பாடு, யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலையில் கோவிலில் முதற்கால யாகபூஜை தொடங்கியது. பின்னர் மண்டபார்ச்சனை, அக்னிகார்யம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மேலும் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்படும் புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

120 சிவாச்சாரியார்கள்

இந்த முதற்கால யாகபூஜையில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சீபுரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 120 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். இவர்கள் ஆறு கால யாகபூஜை மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்துகின்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகபூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகபூஜையும், அதைத்தொடர்ந்து சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளைமறுநாள் கும்பாபிஷேகம்

நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் நான்காம் கால யாகபூஜையும், மாலையில் 5-ம் கால யாகபூஜையும், நாளை மறுநாள் காலையில் ஆறாம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


Next Story