2¼ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது


2¼ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது
x

2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் கணினி வாயிலாக தேர்வு நடக்கிறது.

சென்னை,

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்துவிதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான தகுதித் தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1-க்கான தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள்-2-க்கான தேர்வுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கான தேர்வை 2 கட்டங்களாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை 2 முறை மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, முதல் தாள் தேர்வு 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி, முதல் தாள் மற்றும் 2-ம் தாள் தேர்வுகள் கணினி வாயிலாக நடைபெறுகிறது. இன்று முதல் தாள் தேர்வு தொடங்கியது. காலை மற்றும் பிறபகலில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. கணினி வாயிலாக நடத்தப்படும் இந்த தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு அறைக்கு வரவழைக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், தேர்வு அறைக்குள் செல்லும் தேர்வர்கள் எந்த ஒரு உபகரணங்களையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை. சில தேர்வு மையங்களில் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக வந்தவர்களையும், ஹால்டிக்கெட்டில் ஒட்டப்பட்டு இருந்த அதே புகைப்படத்தை கொண்டு வராதவர்களையும், அசல் ஆதார் அட்டை எடுத்து வராதவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறியதாக கூறப்பட்டது.

150 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இன்று நடந்த தேர்வை பொறுத்தவரையில், வினாக்கள் எளிமையாக இருந்ததாகவே தேர்வர்கள் தெரிவித்தனர்.


Next Story