முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளை இறுதி விசாரணைக்காக அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது..
சென்னை,
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகவும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் வக்கீல் வி.சுரேஷ் ஆஜராகி வழக்கின் தன்மை குறித்து எடுத்துக்கூறி வாதிட்டார்.
'அரசியல் காரணம்'
எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல்கள் வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, "மனுதாரருக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் தகுந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது அரசியல் முன்விரோதம் காரணமாகவே முடித்து வைக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று கூறினர்.
அரசு வக்கீல் வாதம்
லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, "அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மனுதாரர் அமைச்சராக இருந்ததால், அவருக்கு ஆதரவாக அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், அந்த புகாரில் முகாந்திரம் உள்ளது என்பதால் தற்போது புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது என்பதால் மனுதாரர் தரப்புக்கு மேலும் அவகாசம் வழங்கக்கூடாது" என்று கூறினார்.
மற்றொரு புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இறுதி விசாரணை
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் உங்களது கருத்துக்களை இந்த வழக்கு விசாரணையின்போது எடுத்து வைக்கலாம்" என்றனர். பின்னர் இந்த வழக்குகளின் இறுதி விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.