ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது


ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது
x

கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சமுதாய விழாவாக ஆதீன மடங்களில் பட்டின பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

பேட்டி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமுதாய விழாவாக...

தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமிக்க பட்டின பிரவேச விழா சிறப்பாக நடந்ததற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்-அமைச்சர், பல்வேறு ஆதீனங்கள், ஜீயர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாதஸ்வரம், கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சமுதாய விழாவாக ஆதீன மடங்களில் பட்டினப்பிரவேச விழா தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அரசு கலைஞர்களுக்கு விருதுகொடுப்பதற்கு முன்பாக நமது ஆதீனங்கள்தான் முதன்முதலாக கலைஞர்களை தேர்வுசெய்து விருது கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தினார்கள்.

நாதஸ்வர வித்வான்கள், இலக்கியத்துறையில் உள்ள அறிஞர்களை ஆதீன புலவர்களாகவும், இசைப்புலவர்களாகவும் பாராட்டி விருது கொடுக்கப்படுகிறது. கிராமிய கலைஞர்கள் பட்டின பிரவேச நாளில்தான் தங்கள் இசைத்திறமையை காட்டுவார்கள்.

உலகத்திற்கு தெரிவிப்பதற்காக...

25-வது குருமகா சன்னிதானம் இருந்த காலத்தில், மனிதனை மனிதன் சுமக்கலாமா? என்று பெரியாரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு பெரியார், தமிழன் பல்லக்கில் வரவேண்டும் என்றுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே அனைவரும் சென்று பல்லக்கு தூக்கும்படி அப்போது அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்த ஆண்டும் தடையில்லாமல் பட்டின பிரவேச விழா நடந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் காங்கிரஸ், தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் ஆட்சியில் இருந்தபோதும்கூட இந்த பட்டின பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி தடையில்லாமல் நடந்து வந்துள்ளது. இந்த விழாவை உலகிற்கு தெரிவிப்பதற்காகவே தடை, தடை நீக்கம் என்று இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஆதீன கல்லூரி முதல்வர் சாமிநாதன், தருமபுர ஆதீன சிவாகம பாடசாலை செயலாளர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story