அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு


அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM (Updated: 22 Jun 2023 11:23 AM)
t-max-icont-min-icon

அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் குட்டிகுளத்தில் இருந்து பாசனத்திற்கு செல்லும் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த கால்வாயை சீரமைக்க கோரி 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரிகுமார் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அலுவலக வாசலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கருப்பசாமி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திடீரென்று கவுன்சிலர் மாரிகுமார் மற்றும் 2 விவசாயிகள் கால்வாயை சீரமைக்க கோரி அதிகாரிகள் காலில் விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், நீர்ப்பாசன கமிட்டி தேர்தல் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றது. நீர்ப்பாசனம் கமிட்டியில் நிதி உள்ளது. அந்த நிதியை எடுக்க வேண்டும் என்றால் தேர்தல் நடத்த வேண்டும். எனினும் தற்காலிகமாக கால்வாய் சரிசெய்யப்படும். தேர்தலுக்கு பின்னர் நிரந்தரமாக கால்வாய் கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அப்போது, கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், சமூக ஆர்வலர் கஜேந்திரன், தேவேந்திரகுல வேளாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் சங்கர், ெரயில்வே முருகன், பட்டதாரி விவசாயி தியாகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story