நிலம் கொடுத்த விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை


நிலம் கொடுத்த விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை
x

அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

சிமெண்டு ஆலை

அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு தேவையான சிமெண்டு உற்பத்தி செய்ய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு தேவையான விவசாய நிலங்களை கடந்த 1982-ம் ஆண்டு ஆனந்தவாடி என்ற கிராமத்தில் 161 விவசாயிகளிடம் 400 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,300 கொடுக்கப்பட்டது. அப்போது அந்த நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு ஆலையில் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் வேலை வழங்காமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி சுரங்கங்கள் வெட்ட முயற்சி செய்தனர். அதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில் 50 பேருக்கு தினக்கூலி வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

போலீசார் குவிப்பு

மீதமுள்ள 70 பேருக்கு வேலை வழங்காத காரணத்தினாலும், தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த வாரம் மேலும் ஒரு சுரங்கம் அமைக்க நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த விடாமல் ஆனந்தவாடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அரசு சிமெண்டு ஆலை ஆய்வுப் பணிக்காக வந்தார். இதனை அறிந்த ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் ஆலை வாயிலில் காலையிலேயே குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முற்றுகை

இந்த நிலையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு மாலையில் அமைச்சர் வெளியே வந்தார். அப்போது செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையிலான பொதுமக்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனைக்கண்ட அமைச்சர் ராஜா காரில் இருந்து இறங்கி வந்து விவசாயிகளிடம் பேசினார். அப்போது அவர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை நிர்வாகத்தில் பேசி உள்ளேன். ஆகையால் விரைவில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story