பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி சாவு


பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி சாவு
x

பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

திருச்சி

துறையூர்:

விவசாயி

துறையூரை அடுத்துள்ள பெருமாள்பாளையம் ஊராட்சி, காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவரது வயலுக்கான மின் இணைப்பில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் பழுதை சரி செய்ய அருகில் உள்ள மின்மாற்றியில் ஏறியபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கியாஸ் சிலிண்டர் திருடியவர் சிக்கினார்

*தொட்டியத்தை அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் வைரபெருமாள்(46). இவர் கியாஸ் சிலிண்டர் நிறுவனம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு அந்த நிறுவனத்தை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டதால், வைரபெருமாள் அங்கு சென்ற பார்த்தார். அப்போது குண்டுமணிப்பட்டியைச் சேர்ந்த பொன்னுமணி (36) என்பவர் சிலிண்டரை திருடி, சுவரை தாண்டி தூக்கி போட்டுவிட்டு, அவரும் சுவரைத் தாண்டி குதித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தொட்டியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

*காடுவெட்டியை சேர்ந்த தங்கராசு(53), சம்பவத்தன்று காட்டுப்புத்தூர் வாரச்சந்தைக்கு வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை கடைவீதியில் நிறுத்தி பூட்டிவிட்டு, சந்தைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதேபோல் ஸ்ரீராமசமுத்திரத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் தர்மதுரையின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போயிருந்தது. இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

*தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வரதராஜபுரம் முடக்கு சாலை அருகே சந்தேகப்படும்படி நின்ற தொட்டியம் வெங்கடேசன் மகன் முத்துகிருஷ்ணனை(22) பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 7 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

*ராம்ஜிநகர் மலைப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷினி(19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விவசாயம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story