இழப்பீடு பெற்றுத்தரக்கோரி மக்காச்சோள பயிருடன் வந்து விவசாயி மனு


இழப்பீடு பெற்றுத்தரக்கோரி மக்காச்சோள பயிருடன் வந்து விவசாயி மனு
x

இழப்பீடு பெற்றுத்தரக்கோரி மக்காச்சோள பயிருடன் வந்து விவசாயி மனு அளித்தார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் செந்துறை அருகே நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன், மனைவியுடன் மக்காச்சோள பயிரை எடுத்து வந்து ஒரு மனு அளித்தார். அதில், எனக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டேன். 14 கிலோ விதைகளை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில், மக்காச்சோளத்தில் புழுக்கள் தாக்கம் அதிகமாக இருந்தன.

இதனால் அரியலூரில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து மருந்துகளை வாங்கி, பயிருக்கு அடித்தேன். ஆனால் பயிர் வளராமல் கருகிய நிலை அதிகரித்தது. இது பற்றி மருந்து கடையில் கேட்டபோது உரிய பதில் இல்லை. தற்போது பயிரிட்ட மக்காச்சோளங்கள் கதிர் வராமல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாய அதிகாரியிடம் முறையிட்டதில், அவர்களும் வந்து வயலை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். இது வரை ரூ.60 ஆயிரம் செலவு செய்த நிலையில், எனக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். தரமற்ற பூச்சி மருந்துகளை விற்ற கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

அடிப்படை வசதிகள்

கீழப்பழுவூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கீழப்பழுவூர் அருகே 576 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு வாசிகளுக்கு அத்தியாவசிய வசதிகளான குடிநீர் வசதி, மயான வசதி இல்லை. குப்பைகளை கொட்டுவதற்கும், அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கும் எவ்வித வசதியும் இல்லை. இதனால் குடியிருக்கும் மக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. குப்பை தொட்டிகள் அமைத்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அரியலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கழிவுநீரானது அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைக்கான மூடிகள் பல இடங்களில் முறையாக இல்லை. எனவே விபத்து ஏற்படும் முன் ஆய்வு செய்து, அந்த மூடிகளை சரியாக அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுகுமார் மனு அளித்தார். கூட்டத்தில் மொத்தம் 294 மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story