திண்டுக்கல் கலெக்டர் வீடு அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் வீடு அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினர் 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் கலெக்டர் வீடு அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினர் 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் மாசானம் (வயது 35). இவர், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இன்று அவருடைய தந்தை மருதை, தாயார் ராசாத்தி, மனைவி காயத்ரி மற்றும் 3 குழந்தைகள் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள கலெக்டர் வீட்டருகே வந்தனர். அவர்கள் ஒரு கேனில் மண்எண்ணெய் கொண்டு வந்து இருந்தனர்.
திடீரென அவர்கள் கேனில் இருந்த மண்எண்ணெயை தங்களுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களை தடுத்து, மண்எண்ணெய் கேனை பறித்தனர்.
பொய் வழக்கு
இதையடுத்து அவர்களை வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், மாசானம் மீது போலீசார் அடிக்கடி பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், என்றனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கலெக்டர் வீட்டருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.