பெண்களுக்கான உதவித்தொகை குறித்த ஈபிஎஸ் கேள்விக்குதான் முதல்-அமைச்சர் பிரச்சாரத்தில் பதில் அளித்தார் - அமைச்சர் ரகுபதி
பெண்களுக்கான உதவித்தொகை குறித்த ஈபிஎஸ் கேள்விக்குத்தான் பிரச்சாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டத்திற்கு புறம்பாக பிரச்சாரம் செய்யவில்லை. அனைவரும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் கை சின்னத்திற்கே அதிக செல்வாக்கு இருக்கிறது. அதை களத்தில்
நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது தேர்தல் விதிமுறை மீறல் அல்ல. பெண்களுக்கான உதவித்தொகை குறித்து எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்குதான் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதியை பரப்புரையில் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.
இருப்பினும் இது தொடர்பாக அதிமுக வழக்கு தொடர்ந்தால், அதனை திமுக சந்திக்க தயார். அதிமுக தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அவர்களுக்கு கீழமை நீதிமன்றங்களின் வாய்ப்பை அளித்துள்ளது. கீழமை நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளிக்கிறதோ, அதை பொறுத்து தான் அதிமுக நிலைமை தெரிய வரும் என்றார்.