சாலையில் அமைத்த நுழைவு வாயிலை அகற்ற வேண்டும்
சாலையில் அமைத்த நுழைவு வாயிலை அகற்ற வேண்டும்
குன்னூர்
குன்னூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அதில் குன்னூர் அருகே அதிகரட்டியை சேர்ந்த மனோகரன் அளித்த மனுவில், அதிகரட்டி பேரூராட்சி 12-வது வார்டு கோடேரியில் சிறு தேயிலை விவசாயிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல தனியார் எஸ்டேட் அருகில் உள்ள சாலையை பயன்படுத்தி வந்தனர். தற்போது திடீரென அந்த சாலை நுழைவு வாயில் அமைத்து மூடப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பச்சை தேயிைல மூட்டைகளை வெளியே கொண்டு வர முடியவில்லை. வாகனங்களில் கொண்டு வந்தால், அந்த நுழைவு வாயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பச்சை தேயிலையை பறிக்காமல் விட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே அந்த நுழைவு வாயிலை அகற்றித்தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. நேற்று மேலூர், உலிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து 187 மனுக்கள் பெறப்பட்டன. இன்று(வெள்ளிக்கிழமை) குன்னூர் ஊரகம், குன்னூர் நகரம், எடப்பள்ளி, பர்லியார் ஆகிய பகுதி மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. இதில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.