மெகா மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிரடி விசாரணை


மெகா மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிரடி விசாரணை
x

பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.13,700 கோடி சுருட்டி மெகா மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது.

சென்னை

மெகா மோசடி

தமிழக அளவில் பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசை காட்டி முதலீட்டு தொகை பெற்று, ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மெகா மோசடியில் ஈடுபட்டதாக ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ். போன்ற நிதிநிறுவனங்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளன.

2.84 லட்சம் பேர் இந்த மோசடி நிதி நிறுவனங்களில் முதலீட்டு தொகை கட்டி ஏமாந்துள்ளனர். இந்த நிதி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ள இதர நிர்வாகிகளையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற நிர்வாகிகளை சர்வதேச போலீஸ் உதவியுடன் தேடி வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். தலைமறைவு குற்றவாளிகள் குறித்து சரியான தகவல் கொடுத்து துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்களின் 1,115 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்களின் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றனர்.

விரைவில் அமலாக்கத்துறையின் வழக்கும், இந்த மோசடி நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story