'இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறி விட்டது' கவர்னர் பேச்சு


இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறி விட்டது கவர்னர் பேச்சு
x

‘இந்தியாவில் மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறிவிட்டது' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தெலுங்கானா மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி மற்றும் நிர்வாகிகள் ரசித்து பார்த்தனர்.

அதிவேகமாக வளர்ந்து வருகிறது

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் உயரிய சிந்தனையில் தான் பல்வேறு மாநில தினங்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. உலகத்தின் மைய புள்ளியாக இந்தியா மாறி உள்ளது. தற்போது உலக பிரச்சினைகளை தீர்க்கும் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் அதி வேகமாக வளர்ந்து வருகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் மாநிலங்கள் என்பது இல்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா என மாகாணங்களாக இருந்தன. அவற்றில் 600-க்கும் மேற்பட்ட ராஜாக்கள் இருந்தனர்.

நாடு விடுதலை அடைந்தபோது 17 மாநிலங்கள் உருவானது. 1956-ம் ஆண்டு இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்போது 28 மாநிலங்கள் உள்ளன.

அரசியல் அடையாளமாக மாறி விட்டது

வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் கிடைக்காத காரணத்தால் மக்கள் போராடியதன் விளைவாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் புதிய மாநிலங்கள் உருவாகின. மாநிலங்கள் உருவானது துரதிர்ஷ்டவசமாக அரசியல் அடையாளமாக மாறிவிட்டது.

அரசியல் லாபத்துக்காக மக்களை புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story