"தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" முதுமலை குட்டி யானைகள் நடித்த ஆவணப்படம் - ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தது...!
"தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" முதுமலை குட்டி யானைகள் நடித்த ஆவணப்படம் ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தது.
கதை, நடிப்பு, இசை என பலதரப்பட்ட திறமையாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்குவதே திரைப்படம். இதன் மூலம் நடைமுறை வாழ்வில் காணமுடியாத காட்சிகளையும் நம் அனைவரது கண்முன்னே காட்சிப்படுத்தும் பணியினை செய்து வருபவர்கள்தான் திரைப்பட கலைஞர்கள். தமது திறமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனியார், மற்றும் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், நடிப்பு, இசை என பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது.
இதில் ஆஸ்கார் என்பது அமெரிக்காவில், தி அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் திரைத்துறைக்கு வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். 1929-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா 94 ஆண்டுகளை கடந்து விட்டது.
95-ம் ஆண்டுக்கான விருது தேர்வின் இறுதிப்பட்டியலில் முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் (The Elephant whisperers) ஆவண திரைப்படம் இடம் பிடித்துள்ளது. தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் விவரம் வருமாறு:-
ஆசியாவிலேயே நூற்றாண்டுகளை கடந்தது நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம். இங்கு யானை, புலி, கரடி என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பராமரிக்க வனத்துறையினரும், தன்னார்வலர்களும் சில பழங்குடியின மக்களும் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுள் ஒருவராக வருபவர்தான் பாகன். யானைகளை பராமரிப்பதையே பணியாகக் கொண்ட இவர்கள் அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒருவராக திகழ்கின்றனர். இதன் காரணமாகவே யானைகள் அவர்களின் வாக்கிற்கு கட்டுப்படும் சூழலை கடைபிடித்து வருகிறது.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து வந்து கும்கி யானைகளாக மாற்றவும், வனத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியையும் பாகன்கள் செய்து வருகின்றனர். இதில் பொம்மன், பெள்ளி என்ற தம்பதி முதுமலை வளர்ப்பு யானைகள் காப்பகத்தில் பணியாற்றும் பாகன்கள் ஆவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த தாய் யானையை பிரிந்து தவித்த குட்டியை(ரகு) 26.5.2017 அன்று முதுமலை காப்பகத்திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர். இதேபோல் சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த 5 மாத குட்டி யானையையும் (பொம்மி) 26.9.2019-ந் தேதி அழைத்து வந்தனர்.
இந்த யானைகளை பராமரிக்கும் பணி பொம்மன், பெள்ளி இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானைகளுக்கு ரகு, பொம்மி என்று பெயரிட்டு அவர்கள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்ற பெண் திரைப்பட இயக்குனர் யானைகள் பராமரிப்பு பற்றி ஆவணப்படம் தயாரிக்க வனத்துறையிடம் அனுமதி பெற்றார்.
இதன் பின்னர், முகாமில் ரகு, பொம்மியின் வளர்ப்பு பணியில் ஈடுபடும் பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாகக் கொண்டு ஆவண குறும்படத்தை தயாரிக்க தொடங்கினார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். யானை மற்றும் பாகனுக்கு இடையே நிலவும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலுக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது இறுதி பட்டியலுக்கு தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொம்மன் கூறியதாவது:-
10 வயதில் அப்பாவுக்கு உதவியாக பாகன் வேலைக்கு வந்தேன். யானையின் குணங்கள், அதன் செயல்களை நன்கு அறிந்தேன். பின்னர் 18 வயதில் அண்ணா என்ற கும்கி யானைக்கு காவடியாக(பாகனின் உதவியாளர்) பணியாற்றினேன். இப்போது 54 வயது ஆகிறது. யானைகளை பராமரிப்பதில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
எப்பொழுதும் குட்டி யானைகள் மீது எனக்கு தனி பாசம் உண்டு. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை குறித்த தகவல் வந்தவுடன் வனத்துறையினருடன் நேரில் செல்வேன்.
பின்னர் அதன் தாய் குறித்து தேடும் பணியில் ஈடுபடுவோம். காட்டு யானைகள் கூட்டத்தில் பால் வழங்கும் பருவத்தில் பெண் யானை உள்ளதா என கண்காணிப்பில் ஈடுபடுவேன். பின்னர் கண்டுபிடித்த தாய் யானையுடன் குட்டியை சேர்க்க முயற்சி செய்வோம். முதலில் குட்டி தாயுடன் சேராது.
எங்களுடன் ஓடி வரும். இதைப் பார்த்த மற்ற காட்டு யானைகள் எங்களை துரத்தும். பின்னர் தாயுடன் குட்டி சேர்ந்து விடும். தாய் கிடைக்காத பட்சத்தில் வனத்துறையினர் உதவியுடன் முகாமுக்கு கொண்டு வந்து பராமரிப்பில் ஈடுபடுவோம். இதற்காக தனி கூண்டில் அடைத்து உணவுகள் வழங்கப்படும்.
இரவில் நாங்கள் தூங்கும் நேரத்தில் குட்டி யானை பசியால் சத்தமிடும். அது எந்த நேரம் சத்தமிட்டாலும் அதற்கு என்ன தேவை என்பதை நேரம் காலம் பாராமல் வழங்கி பராமரிப்பு பணியில் ஈடுபடுவோம். அதனை எங்கள் குழந்தையை போல் பாவித்து பாசத்துடன் பராமரித்து வருகிறோம். ஆவணப்படம் எடுப்பதாக கூறி பெண் இயக்குனர் கார்த்திகி என்பவர் வந்தார்.
அவரும் எங்களுடன் நன்கு பழகி குட்டி யானையை படம் பிடித்தார். தற்போது ஆஸ்கார் விருது வழங்குவதற்கான இறுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அவரது மனைவி பெள்ளி கூறியதாவது:-
சுமார் 2 ஆண்டுகளாக எடுக்கபட்ட ஆவணப்படம் ஆஸ்கார் விருதின் இறுதி பட்டியலில் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் கிராமத்துக்கே பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. குட்டி யானைகளை பராமரிக்கும் போது குழந்தைகளை போல நம்மிடையே கொஞ்சி விளையாடும். பெற்ற தாயை போல் நினைத்து எங்கு சென்றாலும் உடன் வரும். தாய்-சேய் பாச போராட்டம் போல குட்டி யானையை வளர்ப்பதில் நெகிழ்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்கார் விருதுக்கான தேர்வின் இறுதி பட்டியலில் இருக்கும் இந்த ஆவணப்படம் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.