லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி
ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலியானார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலியானார்.
டிரைவர்
ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எம்.சாண்ட் கிரசர் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் ஏற்றி செல்வதற்காக கனரக லாரி ஒன்று வந்தது. லாரியினை கொல்லம் கிளவூர் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் மகன் ரமேஷ் (31) என்பவர் ஓட்டி வந்தார். கிரசரில் இருந்து லாரியில் எம்.சாண்டை நிரப்பிவிட்டு கிரசருக்கு வெளியில் நிற்பதாக உடன் பணிபுரியும் கிளீனரான கொல்லம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
கிரசரில் இருந்து வெளியே வந்த ஏசுதாஸ் பார்த்தபோது லாரியை காணாததால் தேடி பார்த்துள்ளார். அப்போது அருகில் இருந்த பள்ளத்தில் லாரி கிடந்ததும், லாரியின் சக்கரத்தில் சிக்கி ரமேஷ் உயிரிழந்து கிடப்பதும் தெரியவந்தது.
சக்கரத்தில் சிக்கி சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், ரமேஷ் லாரியை நிறுத்த முயற்சிக்கும்போது பிரேக் பிடிக்காததால் பக்கத்தில் உள்ள பள்ளத்தை நோக்கி லாரி சென்றுள்ளது. அதில் இருந்து தப்பிப்பதற்காக ரமேஷ் கீழே குதித்தபோது நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.