ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மயக்கம்
வெலிங்டன் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் முன்கூட்டியே சாலையோரம் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குன்னூர்
கூடலூர் பஸ் நிலையில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் ஜெகநாதன் ஓட்டினார். அதில் கண்டக்டர் மற்றும் பயணிகள் இருந்தனர்.
இதையடுத்து ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் வெலிங்டன் அருகே வந்தபோது, திடீரென டிரைவருக்கு மயக்கம் வந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து அவரும் மயங்கி விட்டார். இதை கண்ட பயணிகள் அவரை மீட்டு கன்டோன்மெண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மலைப்பாதையில் ஓடும் பஸ்சில் மயக்கம் வந்தாலும், டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக சாலையோரம் நிறுத்தியதால், பயணிகள் உள்பட அனைவரும் உயிர் தப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.