"கலைகளை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைகளை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட இயக்கம்தான் கலைகளை வளர்த்தது. கலையை பாமர மக்களுக்கும் உரியதாக மாற்றியதும் திராவிட இயக்கம்தான். சாமானிய மக்கள் அனுபவித்த வலிகளை கலை வடிவில் திராவிட இயக்கம் தான் பேசியது
அடித்தட்டு மக்களிடம் கலையை கொண்டு சென்றது திமுக தான். கலைஞர்கள் வறுமையின்றி வாழ்ந்தால் தான் கலைகள் வாழும். 10 மாவட்டங்களில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால், சமத்துவத்துக்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டியாய், மூடப் பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது திராவிட இயக்கம் தான். தமிழர்களாகிய நாம் ஒன்று சேர கலைகள்தான் இணைப்பு பாலமாக அமையும். தமிழன் என்றோரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்று அவர் கூறினார்.