தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் 'திராவிட மாடலா'? - சீமான் கேள்வி


தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
x

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் 'திராவிட மாடலா' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிறுவனங்கள் மீதான புகார்களை அலட்சியம் செய்யாது, விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்களின் தவிர்க்கவியலா பயணத்தேவையைப் பயன்படுத்தி, கட்டணத்தைக் கட்டுக்கடங்காது பன்மடங்கு அதிகரிக்கும் தனியார் விரைவுப்பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவது மனவேதனையளிக்கிறது. தனியார் பேருந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தாது, வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற மாநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் அவசரக்கால நெருக்கடிச் சூழலைப் பயன்படுத்தி, சாதாரணக் காலங்களில் வசூலிக்கும் கட்டணங்களைவிட ஐந்து முதல் பத்து மடங்கு வரை கட்டணங்களை தனியார் பேருந்து நிறுவனங்கள் அதிகரிப்பதால் உழைக்கும் மக்கள், படிக்கும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள் என அனைவரும் பெரும் பொருளிழப்புக்கு ஆளாகின்றனர்.

அனைத்து மக்களும் பயணிக்க முடியாதபடி அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால், பேருந்துகளில் நிரம்பி வழியும் அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாகவே, வேறுவழியின்றி தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அனைத்து தனியார் பேருந்து நிறுவனங்களும் தங்களுக்குள் பேசி, ஒருசேர கட்டணத்தைப் பன்மடங்கு அதிகரிப்பதால் விழாச் செலவிற்கான தொகையின் பெரும்பகுதியைப் பயணிக்கவே எளிய மக்கள் செலவிட வேண்டியுள்ளது பெருங்கொடுமையாகும்.

தற்போது மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் அதனைத் தொடர்ந்து விடுதலை திருநாள் ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு வழக்கம்போல தற்போதும் தனியார் பேருந்து நிறுவனங்கள் 30 விழுக்காடு அளவிற்கு கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் தனியார் பேருந்துகளில் நடைபெறும் இக்கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த தவறியதோடு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக, கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்திப் பேசுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் கட்டணத்தைக் குறைக்கப் பேச்சுவார்த்தை, எச்சரிக்கை என்று செய்தி அரசியல் மூலம் விளம்பரம் தேடும் திமுக அரசு, மறுபுறம் மக்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்துச் சிறிதும் கவலையின்றி, கட்டணக்கொள்ளையை ஆதரிப்பதென்பது மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டண உயர்வுக்கு எதிராக கடுமையான கண்டனக் குரலை எழுப்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது ஆட்சிக்காலத்தில் நடைபெறும் இக்கட்டணக் கொள்ளையைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

ஆகவே, தனியார் பேருந்துகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளைக்கு திமுக அரசு இனியும் துணைபோகாது, கட்டண நிர்ணயத்தை முறைப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், அரசின் எச்சரிக்கையையும் மீறி கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிறுவனங்கள் மீதான புகார்களை அலட்சியம் செய்யாது, விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story