அதிமுக ஆட்சி சீரழித்ததை தற்போது திராவிட மாடல் அரசு சரி செய்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிமுக ஆட்சி சீரழித்ததை தற்போது திராவிட மாடல் அரசு சரி செய்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை, மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகி சுந்தர் வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதிநிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது.
அதிமுக ஆட்சியில் முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
உழைப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் இந்தக் கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். பதவி வரும், போகும். கழகம்தான் நம்முடைய அடையாளம். நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு.
அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர் மூச்சாக கருதி நம்முடைய சுந்தர் போன்றவர்கள் காத்து வருவதால்தான், பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 6-ஆவது முறையாக அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றைக்கு ஆட்சியை, அதுவும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி, அதே நேரத்தில், சுந்தர் ஆற்றக்கூடிய பணிகளை என்னால் நிச்சயமாக மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. இந்த இயக்கத்திற்கு அவர் ஆற்றக்கூடிய அந்தப் பணிகள் மேலும், மேலும் வளரவேண்டும் என்ற அந்த உணர்வோடு தான், நான் மணமக்களை வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறேன் என்று சொல்லி, மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.