வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை
தா.பழூர் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
வீட்டின் கதவு உடைப்பு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சாந்தி. இவர் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆண்டிமடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை இடங்கண்ணி கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டின் தோட்டத்தில் இருந்த நாய்க்கு உணவு வைக்க சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சாந்தி ஆண்டிமடத்திலிருந்து தா.பழூர் வந்து சேர்ந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாள் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
நகைகள், பணம் கொள்ளை
வீட்டிற்குள் சென்று பார்த்த போது 2 அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி பீரோவில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளும், ரூ.30 ஆயிரமும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தடயங்களை சேகரித்தார்.
போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் மலர் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகள் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.