மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதே தி.மு.க.வின் லட்சியம் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதே தி.மு.க.வின் லட்சியம் என்று அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
நிலக்கோட்டையில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகம்தான் கல்வியில் முன்னோடியாக உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதே தி.மு.க.வின் லட்சியம். கூட்டுறவுத்துறை மூலம் நகைக்கடன் தள்ளுபடியை தி.மு.க. அரசுதான் செய்தது. ஆனால் இதில் ஒருவர் மட்டுமே 600-க்கும் மேற்பட்ட நகைக்கடன் பெற்று மோசடி செய்தார். எனவே அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு துறையில் பல்வேறு மோசடிகள் நடந்தது தெரியவந்தது.
தமிழகத்தில் மதவாத கட்சிகள் வளர வாய்ப்பே இல்லை. இந்தியாவில் சிறந்த முதல்-அமைச்சராக விளங்கும் நோக்கத்தில் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேலுசாமி எம்.பி., மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், நகர பொறுப்பாளர்கள் கதிரேசன், ஜோசப் கோவில் பிள்ளை, பேரூராட்சி தலைவர்கள் செல்வராஜ், சுபாஷினி பிரியா கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.